|
சுவிசேஷ ஊழியத்திற்கு மாற்கு 16:15-ல் இயேசு தன் சீஷர்களுக்கு கட்டளையிட்டபடி “உலகமெங்கும் போய் சகல மனுஷர்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே” தெளிவான முதல் படியாகும்! ஆகவே, இந்தக் கட்டளை ஒரு தனிப்பட்ட விசுவாசிக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையாயிராமல், கிறிஸ்துவின் முழு சரீரமான சபைக்கும் உரியதேயாகும்!! உலகில் உள்ள ஒவ்வொரு மனுஷருக்கும் சென்று பிரசங்கிப்பதை, ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு ஸ்தல சபையோ, தாங்களாகவே செய்து முடிப்பது இயலாத காரியம்! இந்தப் பணியில் ஒவ்வொருவருக்கும், அவர்களால் முடிந்த அளவிற்கு ஒரு சிறு பங்கு உண்டு!! அந்தப் பங்கு சிறியதேயாகிலும், அதை நிறைவேற்றிட நாம் யாவரும் கவனம் கொண்டிருக்க வேண்டும்.
ஆகிலும் ஒவ்வொரு கிறிஸ்தவன் மீதும் விழுந்த மிகப் பெரிய பொறுப்பு ஒன்று உண்டு! நமக்குள்ள இந்தப் பொறுப்பை அறிந்துகொள்ள அப்போஸ்தலர் 1:8-ம் வசனத்தை கவனியுங்கள். ஆம், கிறிஸ்துவுக்காய் வாழும் “தூய சாட்சியுள்ள” வாழ்க்கையே அந்த பொறுப்பாகும். நாம் யாவருமே கிறிஸ்துவிற்கு வல்லமையான சாட்சிகளாய் இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு விசுவாசியும் “உன்னதத்தின் பெலனால்” தரிப்பிக்கப்பட வேண்டும் என்றே இந்த வசனம் வலியுறுத்திக் கூறுகிறது. இங்கு நாம் உற்று கவனிக்க வேண்டியது என்னவெனில், நாம் அனைவருமே சுவிசேஷகர்களாய் அழைக்கப்படவில்லை என்பதுதான்... ஏனெனில், “சிலரை மாத்திரமே” சுவிசேஷகர்களாய் கிறிஸ்து சபைக்கு தந்தருளியிருக்கிறார் என எபேசியர் 4:11 தெளிவாகக் கூறுகிறது. ஆனால் நாம் யாவருமே “அவருடைய சாட்சிகளாய் இருப்பதற்கு” அழைக்கப் பட்டிருக்கிறோம்!!
இவ்வாறு சாட்சியாய் வாழ தீர்மானிக்கும் ஒரு கிறிஸ்தவன், தான் வாழும் பகுதியில் கிறிஸ்துவை வலிமையோடு பிரகடனம் செய்கிறான். அதாவது தன் உறவினர்கள், அண்டை வீட்டார்கள், வேலை ஸ்தலத்தில் தன்னோடு சேர்ந்து வேலை செய்பவர்கள். . . இன்னும் இதுபோன்று தினசரி தன் பிரயாணத்தின் மூலமோ அல்லது வேறு வகையிலோ சந்திக்க நேரும் யாவருக்கும், நாம் அனைவருமே சாட்சிகளாய் விளங்கிட முடியும்! விளங்கிட வேண்டும்!! சற்று கவனமாய் கேளுங்கள்: நாம் யாராயிருந்தாலும், என்ன வேலை செய்கிறவர்களாய் இருந்தாலும், கிறிஸ்துவுக்கு சாட்சிகளாய் நாம் விளங்கிட வேண்டியது நம் ஒவ்வொருவர் மீதும் விழுந்த மிகப்பெரிய பொறுப்பாகும்!!
துரதிருஷ்டவசமாக, இன்று தங்களை மனந்திரும்பியவர்களாகக் கூறிக்கொள்பவர்களில்கூட பெரும்பாலோனோர் மெய்யான மனந்திரும்பியவர்களாய் இல்லை! வாழ்வின் பல்வேறு பகுதிகளில், மனந்திரும்ப வேண்டிய விதத்தில் ‘சரியானபடி மனந்திரும்பாமலே’ இவர்கள் தேங்கியிருக்கிறார்கள்! ஒருவேளை, இவர்கள் சென்ற சுவிசேஷ கூட்டத்தில் “பாவத்திலிருந்து ஆழமாய் மனந்திரும்ப வேண்டும்! பிறர் பொருட்களை திரும்ப செலுத்த வேண்டும்!!” போன்ற முக்கியமான பகுதிகள் ஒரு வார்த்தைகூட பிரசங்கிக்கப்படாமலே. . . நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் அதுவே போதும்! என சுவிசேஷகர்கள் பிரசங்கிக்க கேள்விப்பட்டிருப்பார்கள்! அதுபோன்ற பரிதாப நிலையில் நீங்கள் இருந்தால், உடனே தேவனுக்கு முன்பாக மனந்திரும்பி, பரிசுத்தாவியின் வல்லமையை பெற்று “சாட்சியுள்ள வாழ்க்கையை” வாழ்ந்திட தீவிரம் கொள்ளுங்கள்!
|