|
“நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர்” என எபிரேயர் 7:17-ல் வாசிக்கிறோம்.
ஓர் அறியப்படாத மனுஷனே இந்த மெல்கிசேதேக்கு ஆவான்! ஆகிலும் இவனோ தேவனோடு நெருங்கிய உறவுகொண்ட மனுஷனாய் இருந்தான். ஓர் மாபெரும் யுத்தத்தை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்த ஆபிரகாமைச் சந்தித்து அவனுக்கு அப்பமும், திராட்சை ரசமும் தேவன் வழங்கிய வார்த்தையையும் கொடுத்து ஆசீர்வதித்ததே இந்த மெல்கிசேதேக்கு செய்த வலிமையான செயலாகும்.
இந்த மெல்கிசேதேக் எந்தவித கவர்ச்சியும், ஆடம்பரமும், விளம்பரமும் இல்லாமல் “அமைதியாய் தோன்றி” ஆபிரகாமுக்குத் தேவையானதைக் கொடுத்துவிட்டுச் சென்றதை சற்று எண்ணிப் பாருங்கள்! அவர் கொடுத்துச் சென்றது, 1) சரீரத்தேவைக்குரிய உணவாயும் 2) பெருமையிலிருந்தும் பொருளாசையிலிருந்தும் ஆபிரகாமை இரட்சிப்பதற்கேற்ற வார்த்தையாயும் இருந்தது!!
இவ்வாறு ஆபிரகாமின் தேவையைப் பூர்த்தி செய்தபின்பு, எவ்வாறு அமைதியாய் மெல்கிசேதேக்குத் தோன்றினாரோ...... அதேவிதமாய் அவ்விடத்தைவிட்டு மறைந்து சென்றுவிட்டார்!!
இந்த ஊழியத்தைத்தான் நாம் யாவரும் இச்சித்து நாட வேண்டும். அதாவது, தேவவையுள்ளவர்களை அமைதியாய் வந்து ஆசீர்வதித்துவிட்டு எவ்வித கனத்தையும், மெச்சிக் கொள்ளுதலையும், விளம்பரத்தையும் நன்றியையும் கூட தனக்காக எதிர்பர்க்காமல் மறைந்து சென்றுவிடும் உன்னத ஊழியம்!!
இன்றும், சபைக்கூட்டங்களுக்கு வரும் ஜனங்கள் இவ்வுலகில் தாங்கள் வாழும் அல்லது பணிசெய்யும் இடங்களில் கடும் யுத்தம் செய்து களைத்துப்போய் பெலனிழந்து வருகிறார்கள். இச்சமயத்தில் அந்த விசுவாசிகளைப் புத்துணர்ச்சியூட்டும்படியாய் மெல்கிசேதேக்கைப் போல் அமைதியாய் வந்து, அவர்களுக்குத் தேவையான ஆவிக்குரிய உணவையும் போஷாக்கையும் தந்து, தீர்க்கதரிசனம் உரைத்துச் செல்வது எத்தனை அருமையாய் இருக்கும்! அதேபோல், இப்பூமிக்குரிய தேவையில் தாழ்ச்சியடைந்து இருக்கும் அவர்களுக்கு உதவிசெய்து அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்கித் தருவதும் எத்தனை பாக்கியமானது!
|